
முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை உரியவராக கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன், தற்போது விருப்ப ஓய்வு பெற்று நேரடி அரசியலில் களம் இறங்கி உள்ளார்.
ஒடிசா அரசியலில் முதலமைச்சரின் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை கூறிய நபராக வி. கார்த்திகேய பாண்டியன் இருந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகி ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். 2011ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் முக்கியத்துவம் பெறுவதாக கடந்த சில ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் வி. கார்த்திகேய பாண்டியன் தனது விருப்ப ஓய்வு கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். இந்த கடிதத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து தற்போது நேரடி அரசியலில் வி. கார்த்திகேய பாண்டியன் களமிறங்க இருப்பதாக சொல்லப்பட்டது.
இதை உறுதி செய்யும் வகையில் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பது, ஒடிசாவின் மாற்றுத் திறன் முயற்சிகள் மேற்கொள்ளும் 5டி திட்டத்திற்கு தலைவராக விகே பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இவர் நேரடியாக முதல்வரின் கீழ் இயங்குவார். மேலும் இந்த பொறுப்பு கேபினட் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, விகே பாண்டியன் அடுத்த தேர்தலில் முதலமைச்சராக வரக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி நவீன் பட்நாயக், வி.கே பாண்டியனை முன்னிலைப்படுத்துவதை ஒடிசா மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதே சமயம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இனி வி.கே பாண்டியன் முக்கிய நபராக செயல்பட உள்ளார்.