தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக(SETC) Multi Axle கொண்ட 20 அதிநவீன வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பூர், கோவை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூர வழித்தடங்களில் வால்வோ ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக பயணிகளுக்கு கூடுதல் வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும்.
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இதில் 110 பேருந்துகள் குளிர்சாதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதிகளை கொண்டது. மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை மற்றும் அனைத்து சொகுசு வசதிகளுடன் இயக்கப்படும்.
முதல்முறையாக அரசு போக்குவரத்து கழகத்தில் இந்த வகை பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ரூபாய் 34.30 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இந்த பேருந்துகள் நவீன வசதிகளுடன் பெரிய அளவிலான ஜன்னல்கள், சார்ஜிங் வசதி, கேமராக்கள், சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செமி ஸ்லீப்பர் வகையில் முழங்கால்கள் வரை வைக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து போன்ற ஆபத்து காலங்களில் பயணிகளை பாதுகாக்கும் விதமாக பேருந்தின் உள்ளேயே தண்ணீர் தெளிப்பான்களுக்கான குழாய்களும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்திலான இந்த வால்வோ பேருந்துகள் 2x2 சீட்டிங் அமைப்புடன் 51 இருக்கைகள் கொண்டு, மேடு பள்ளங்களில் பேருந்து செல்லும் பொழுது அதிர்வுகள் தெரியாமல் இருக்க ஃபுல் ஏர் சஸ்பென்ஷன் வசதியுடன் உள்ளது.
ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணங்கள் வழக்கமாக சாதாரண நாட்களில் ஒரு தொகையிலும், விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் மிக அதிகமாகவும், பயணிகளின் தேவைக்கேற்பவும் வசூலிக்கப்படுகிறது.பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி மக்களை அவதிப்பட வைப்பார்கள். இப்படி விழாக் காலங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு மாற்றாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.