

ஜனவரி 13-ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
பொங்கல் விழா நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றனர். பண்டிகை காலம் என்பதால் மக்களும் வேறு வழியின்றி இந்த கட்டணத்தை செலுத்தி பயணிக்கின்றனர். தமிழக அரசு ஒவ்வொரு பண்டிகையின் பொழுதும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டண உயர்வு குறித்து எச்சரித்து ஆய்வு மேற்கொண்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்வது பெரும் பாடாக உள்ளது. வழக்கமான நாட்களைக் காட்டிலும் பண்டிகை, விழாக் காலங்களின் பொழுது டிக்கெட் கட்டணம் அதிக அளவில் உயர்ந்து பயணிகளை பதற வைக்கிறது.
ரயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்து விட்ட நிலையில் மக்களின் அடுத்த தேர்வாக இருப்பது பேருந்துகள் தான். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகளின் விருப்பமாக ஆம்னி பஸ்கள் இருந்து வருகிறது. காரணம் கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை ஓடி பிடிப்பதை விட, கோயம்பேட்டிலிருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களையே பெரும்பாலானவர்கள் தேர்வு செய்கிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 1400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பொங்கல் விடுமுறையில் 2000 முதல் அதிகபட்சமாக 4,200 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூருக்கு வழக்கமான நாட்களில் 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்பொழுது அதிகபட்சமாக 3000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரைக்கு வழக்கமான நாட்களில் 700 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது போய் தற்பொழுது அதிகபட்சமாக 3,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலுக்கு சாதாரண நாட்களில் 900 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி 4,200 ரூபாய் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி செல்வதற்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம் 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக அரசு இதில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.