நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பால் அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி..!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து இருப்பதான் காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று காலை திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை வேறு ஒருவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.