தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது இத்திட்டத்தின் கீழ் மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததையொட்டி "கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில்,"பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்..." என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அர்ச்சகர் பயிற்சி முடித்த மூன்று பெண்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.