தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ சேவை வழித்தடத்தை தொடங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டம்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. 3 வது வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு மெட்ரோ இரயில் சேவையை தொடங்குவதற்கான ஆலோசனையை மேற்கொண்டுள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம். இதன் மூலம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்ம சந்திரா வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஆகும் செலவுகளை இரண்டு மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் இருப்பதால் இரு மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் சென்றுவர பயன்படுத்துவதால் இரு மாநிலத்திற்கு இடையேயான மெட்ரோ சேவையை முதலில் இங்கிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயணம் நேரம் குறையும். இந்த திட்டம் தொடங்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட முதல் மெட்ரோ இரயில் சேவை இதுவாகும்.