திருச்சி நிதி நிறுவனத்தின் 400 கோடி சொத்துக்கள் முடக்கம்!

ELFIN நிறுவனர்களில் ஒருவரான ராஜா
ELFIN நிறுவனர்களில் ஒருவரான ராஜா

-

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு எல்ஃபின் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை ராஜா, ரமேஷ் என்ற சகோதரர்கள் செயல்படுத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு பணம் இரட்டிப்பாக வழங்கப்படும், மாதம் மாதம் மளிகைப் பொருட்கள் வீடு தேடி வரும், வெளிநாடு சுற்றுலா போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்தது. இதனால் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெருமளவில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.

அதே நேரம் எல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் சினிமா படங்கள் தயாரிப்பு அரசியல் என்று திருச்சி மக்களின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால் அதே நேரம் நிறுவனத்தில் முதலீடு செய்த மக்களுக்கு அளித்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே கடந்த வருடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து எல்ஃபின் நிறுவனர் ராஜா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தலைமறைவான ராஜா தொடர்ந்து ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த வழக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்று இருக்கலாம் என்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ராஜா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின் படி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரக்கூடிய நேரத்தில் இக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். எல்ஃபின் நிறுவனத்தின் மீது இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 25 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் முதலீடு செய்து புகார் அளிக்காதவர்கள் விரைவாக வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், மேலும் நிறுவனத்திற்கு சொந்தமான 400 கோடி மதிப்புள்ள 257 சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த அறிவிப்பில் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com