தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த தீபாவளியை மழை இல்லாமல் கொண்டாடிய மக்கள், தீபாவளி பண்டிகை முடிந்ததுமே மழையை சந்திக்க தொடங்கியுள்ளனர். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று (நவம்பர் 14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழகம், புதுச்சேரியில் அதிகாலை முதலே கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவில், வடகிழக்கு பருவமழை தொடங்கி 1 மாதம் ஆன நிலையில், இன்று தான் அதன் உச்சக்கட்ட ஆட்டத்தை காட்டியுள்ளது.
வடதமிழக பகுதிகளில் இன்று அதி கனமழை பதிவாகியுள்ளது. மேலும், தென் சென்னை பகுதியான கேளம்பாக்கத்தில் கனமழை பெய்து வருகிறது என்றும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் உள்ள கடலோர பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் புயலுக்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் அடுத்து வரும் 3 தினங்களுக்கு கனமழை வெளுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.