
மகளிர் உரிமைத் தொகை மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வழங்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் 14ம் தேதியே குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. செப்டம்பர் 19ஆம் தேதி முதலே நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்து வந்தனர். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மக்களின் வசதிக்காக 11ஆம் தேதியே உரிமைத் தொகையை வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெறுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.