குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்... இன்னும் மூன்று வாரங்களில் அறிவிப்பு வெளியாகிறது!
ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக தி.மு.க அளித்த தேர்தல் அறிக்கை என்னாச்சு? என்பதுதான் அ.தி.மு.க மட்டுமல்ல பிற எதிர்க்கட்சிகளும் முன்வைத்த கேள்வி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரம் ரூபாய்தான் பிரதான பிரச்னையாக பேசப்பட்டது.
தி.மு.கவின் 30 அமைச்சர்கள், 30 நாட்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தும், இறுதி நாளில் முதல்வர் பங்கேற்று பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தது. கடைசி அஸ்திரமாக ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஒன்றையும் முதல்வர் வெளியிட்டார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆயிரம் ரூபாய் திட்டம் அறிவிக்கப்படும் என்று கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் தி.மு.கவுக்கு கைகொடுத்திருக்கிறது.
முதல்வரின் அறிவிப்பு, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அ.தி.மு.கவை நிலைகுலைய வைத்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமைத்தொகை குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் மனுவும் அளித்தது.
மறுநாள் இது குறித்து பொதுக்கூட்டத்தில் பேசும்போது முதல்வர் விளக்கமளித்தார். மகளிருக்கான 1000 ரூபாய் என்பது புதிய திட்டம் அல்ல. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை எப்போது வரும் என்று நமக்கு இருக்கும் அக்கறையை விட அவர்களுக்குத்தான் அதிகமாக அக்கறை இருக்கிறதாம். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள்.
அவர்கள் கேட்டதால், நான் பதில் கூறினேன். உடனே ஸ்டாலின் எவ்வாறு அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். நீங்கள்தானே என்னாச்சு என்னாச்சு என்று கேட்டீர்கள். அதற்குத்தான் பதிலளித்தேன். அது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது அல்ல, ஏற்கனவே நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுதான்” என்று பேசினார்.
அதெல்லாம் சரி. பெண்களுக்கான உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் மாதம் 20 ஆம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினமே நிதியமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என்கிறது, கோட்டை வட்டாரம். நல்ல செய்தி. நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க கூட்டணி எதிர்கொள்வதற்கு இது பலம் சேர்க்கும் என்கிறார்கள்.