திருப்பூரில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 10 ஆம் வகுப்பு மாணவர் பலி!

திருப்பூரில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 10 ஆம் வகுப்பு மாணவர் பலி!

திருப்பூரில் அருள்ஜோதிபுரம் பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் நிறைந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வீடுகளில் இருந்து தெருக்களில் இறங்க வேண்டு மென்றால் கால்வாய்க்காக அமைக்கப்பட்ட குழியைத் தாண்டும் சிரமத்தை அங்குள்ள மக்கள் அனுபவித்து வந்தனர். சாதாரணமாக தாவிக் குதித்து தாண்ட முடியாத அளவுக்கு இந்தக் கால்வாய்கள் அகலமாகவும், ஆழமாகவும் இருந்த நிலையில் வீட்டுப் பெண்களும், வயதானவர்களும் வீட்டைத் தாண்டி தெருவில் இறங்கும் போது மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் அருள் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வீட்டின் வெளியில் இருந்த பள்ளத்தைக் கடக்க மரப்பாலம் ஒன்றை அமைக்க முயற்சித்தார். மாணவர் மரப்பாலத்தை பொருத்த கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவர் மீது விழுந்தது. சுவர் விழுந்த வேகத்தில் அதன் இடிபாடுகளால் அழுத்தப்பட்டு கீழே விழுந்த மாணவர் வெளியேற வழியின்றி உள்ளே சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியை மூட முயன்ற மாணவர் துரதிருஷ்டவசமாக பழியானது அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இறந்த மாணவரின் தந்தை இறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது மகனும் இப்படி ஒரு எதிர்பாராத விபத்தில் பலியானது மாணவரது குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது.

மாநகராட்சி சார்பில் கால்வாய் அல்லது மற்ற மராமத்துப் பணிகளுக்காக இப்படிக் குழிகள் தோண்டப்படும் போது வீடுகளின் சுற்றுச்சுவர்கள் வலிமையானதாக இருக்கின்றனவா என சோதித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

மாணவன் மரணத்தில் யாரைக் குற்றம் சொல்வது? மாணவர் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் சற்றுக் கவனமாக இருந்திருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம். மாநகராட்சி ஊழியர்கள் தரப்பிலும் போதிய கவனமின்மை தெரிகிறது. கால்வாய்க்காக குழி தோண்டும் போது நிச்சயமாக வீடுகளின் சுற்றுச்சுவர்களுக்கு பாதிப்பு நேரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கும் பட்சத்தில் அது குறித்த எச்சரிக்கையை குடியிருப்பு வாசிகளிடம் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். இப்படி இரு தரப்பிலும் போதிய கவனமின்மை இருந்த பட்சத்தில் அநியாயமாக ஒரு அப்பாவி மாணவன் உயிரிழக்க வேண்டியதாயிற்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com