பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஆங்கிலத்தில் 15 மாணவர்கள் நூற்றுக்கு நூறு; தமிழில் இரண்டே பேர்தான்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்திய பிளஸ் டு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்வு எழுதிய மாணவர்களில் 91.45 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் மாணவர்கள் கவனம் செலுத்தாது முடிவுகளில் வெளிப்படையாக தெரிகிறது.
இன்று வெளியான பிளஸ் டு தேர்வு முடிவுகளை பார்க்கும்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம் என்றாலும் முதன்மைப் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாணவர்கள் மொழிப்பாடங்களை தொடர்ந்து தவிர்த்து வருவது கவலையளிக்கிறது.
கணக்கு பதிவியலில் 6573 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 81.89%, தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடங்களைப் பொறுத்தவரை இயற்பியல் - 812 வேதியியல் - 3909 உயிரியல் - 1494 தாவரவியல் - 340 விலங்கியல் - 154 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 690 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், மொழிப்பாடங்களான ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே மொழிப்பாடங்களில் மீது மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது.
முதன்மைப் பாடங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு முப்பத்து ஐந்து மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும். ஒரிரு மாணவவர்கள் முதன்மைப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தாலும், மொழிப்பாடங்களில் 50க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள்.
முதன்மைப் பாடங்களில் 90 சதவீத மதிப்பெண் எடுக்க முடிந்த மாணவர்கள் கூட மொழிப்பாடங்களில் மிகக்குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் முழுவதும் மாணவர்களின் கவனம் முழுவதும் முதன்மைப் பாடங்களில் மட்டுமே இருந்து வருகிறது.
கடந்த மாதம் நடைபேற்ற தேர்வில் மொழி பாடம் தேர்வு எழுத வராமல் போனவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 ஆயிரம் இருக்கலாம். ஏறக்குறைய 6 சதவீத மாணவர்கள் மொழிப் படங்களுக்கான தேர்வுகளை புறக்கணித்திருக்கிறார்கள். மொழிப்பாடம் தானே என்கிற அலட்சியம் தாண்டி மொழிப்பாடத்தின் மீதும் முதன்மைப் பாடத்திற்கு இணையான கவனமும் மதிப்பும் தரப்படவேண்டும். நடக்குமா?