வாசிப்பின் வாசம் வீசும் புத்தகக் கண்காட்சி!

வாசிப்பின் வாசம் வீசும் புத்தகக் கண்காட்சி!

– ரேவதி பாலு

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளையொட்டி, சென்னை புத்தக கண்காட்சியும் திருவிழாக் கோலமாக களைகட்டும்!

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் கண்காட்சியை ஒத்திப்போடுவதாக அறிவித்தார்கள். திரும்ப நடக்குமா என்ற சந்தேகம் புத்தக்ப் பிரியர்கள் மனதில் எழுந்தது. நல்லவேளையாக, கொரோனா தொற்றுக் குறையத் தொடங்கியதால் – புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நிகழும் என்று மறுஅறிவிப்பு வந்தது

உடனடியாகக் கிளம்பிச் சென்று ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்த்து வந்தோம். கன்காட்சி நேரம் காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.. ஆனால், நேரம் போனதே தெரியவில்லை! ஒவ்வொரு ஸ்டாலும் அவ்வளவு சுவாரஸ்யம்!  தமிழ்நாடு மட்டுமின்றி, மும்பை, கர்னாடகா, கேரளாவிலுள்ள புத்த பதிப்பாளர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

'பபாசி' என்னும் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு நுழைவாயிலிருந்து கோலாகலக் கும்பல். டிக்கட் வாங்கும் இடத்தில் வரிசை கட்டி நிற்கும் மக்கள். மாணவர்களுக்கு இலவச அனுமதி. ஆன்லைன் மூலமும் டிக்கட் வாங்கும் வசதி இந்த வருடம் வந்திருக்கிறது.

பிரபலமான பெரிய பதிப்பகங்களில் தொடங்கி, வளர்ந்து வரும் சிறிய பதிப்பகங்கள் வரை மொத்தம் 800 ஸ்டால்கள். நிறைய ஸ்டால்களில், 'பொன்னியின் செல்வன்' மலிவுப் பதிப்பு புத்தகங்களைக் காண முடிந்தது.

அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு குதித்துக் கொண்டு வரும் ஐந்து வயது குழந்தை முதல் சக்கர நாற்காலியில் வரும் எண்பது வயது முதியவர் வரை எல்லோர் முகத்திலும் ஒவ்வொரு ஸ்டாலையும் பார்க்கும்போது தெரியும் ஆர்வம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. யார் சொன்னது.. புத்தகம் படிக்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்து விட்டது என்று?!

'ஆங்கிலத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் புத்தகம் கிடைக்குமா?' என்று ஓரு இளம்பெண் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று கேட்டுக்கொண்டிருக்க, அவள் கையைப் பிடித்தபடி துறுதுறுவென்று ஒரு 6 வயது சிறுமி! அச்சிறுமியின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையிலிருந்து எட்டிப் பார்த்தது சிறுவருக்கான வண்ண வண்ண அட்டைப் படங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள்.

கண்காட்சிக்கு வெளியேயும் திருவிழா கொண்டாட்டம்தான்.. வெளியே உள்ள அரங்கத்தில் தினந்தோறும் புத்தக வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அரங்கினுள் பர்ச்சேஸ் முடித்து விட்டு வெளியே வரும் கும்பல் நேரே படையெடுப்பது – கம கம வாசனை வரும் உணவகங்கள் பக்கம்தான்! டெல்லி அப்பளம், மசாலா சுண்டல், பஜ்ஜி வகையறாக்கள் சுடச்சுட போடப்பட்டு உடனுக்குடன் காலியாகிறது. முப்பது ரூபாய் கொடுத்து ஒரு கேஸ் பலூனை வாங்க பெற்றோரும் குழந்தைகளுமாக ஏகப்பட்ட தள்ளுமுள்ளு!

என்னதான் உலகமே தலைகீழாக டிஜிட்டல் உலகமாக மாறினாலும், மின் இதழ், மின் புத்தகங்கள் என்று வந்து கையில் வைத்திருக்கும் செல்போனிலேயே பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கும் வசதி வந்து விட்டாலும், அச்சுப் பிரதிகளைத் தேடி வரும் மக்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் புத்தக வாசிப்பின் நறுமண வாசம் புத்தகக் கண்காட்சியில் கமழ்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com