25 ஆண்டுகள் நிறைவடைந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவம் - பலியானவர்களுக்கு அஞ்சலி, பலத்த பாதுகாப்பில் கோவை மாநகரம்!

25 ஆண்டுகள் நிறைவடைந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவம் - பலியானவர்களுக்கு அஞ்சலி, பலத்த பாதுகாப்பில் கோவை மாநகரம்!

பிப்ரவரி 14, 1998, மாலை 3.30 மணி. அப்படியொரு மோசமான தொடர் குண்டுவெடிப்பை தமிழ்நாடு அதுவரை கண்டதில்லை. கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அத்வானி பேசுவதாக இருந்தது. பொதுக்கூட்ட மேடைக்கு அருகே 100 மீ தூரத்தில் வைக்கப்பட்டிருந்த முதல் குண்டு மிகச் சரியாக 3.50 மணிக்கு வெடித்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வரவேண்டிய விமானம், தாமதமானதால் அத்வானி உயிர் தப்பினார்.

அடுத்து வந்த இரண்டு நாட்களில் 11 இடங்களில் குண்டு வெடித்தது. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது. அரசியல் ரீதியாகவும் கோவை குண்டுவெடிப்பு பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக கோவையில் நடந்த மத மோதல்கள் பற்றி விசாரிக்க நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவத்தையும் சேர்த்து நீதிபதி பி.ஆர் கோகுல கிருஷ்ணனின் கமிஷன் விசாரிக்க வேண்டியிருந்தது. விசாரணையின் முடிவில் மத ரீதியிலான அடிப்படைவாத அமைப்புகள் கோவை மாநகரத்தில் பெற்றிருந்த வளர்ச்சி வெளிச்சத்திற்கு வந்தது.

நேற்று குண்டுவெடிப்பு தினம். 25 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மோட்ச தீப வழிபாடு, தீபாஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உறவினர்களும் பங்கேற்று புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று கோவை நகரில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

அதிரடி காமாண்டோ, ரிசர்வ் போலீஸார் உட்பட ஆயிரக்கணக்கான காவல்துறையினர் கோவை மாநகரத்தில் குவிக்கப்பட்டிருந்தார்கள். மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்ததார்கள். கோயில்கள், ஓட்டல்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு சோதனையும் நடந்தது.

வழிபாட்டு தலங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் தீவிர சோதனைகள் நடந்தன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இன்னொரு பிப்ரவரி 14 இனிதே கழிந்தது.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் கோவை மீண்டு வர பல மாதங்களானது. குண்டுவெடிப்பின் தாக்கத்தை கோவை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களாலும் இன்றும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com