வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.

சாலையை கடக்க முயன்றபோது 2 சைக்கிள்களில் வந்த மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. திருசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தறிக்கெட்டு ஓடிய கார் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்ட மற்ற மாணவ- மாணவிகள் அங்கிருந்து சிதறி ஓடினர். கார் மோதியதில் பலத்த காயமடைந்த மாணவர்கள் சூர்யா, விஜய், சபீக் ஆகியோர் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அதை கண்ட மற்ற மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி சென்றனர். விபத்து ஏற்படுத்திய கார் சாலையோரம் மோதி நின்றது. அதில் இருந்த டிரைவர் உள்பட 2 பெண்கள் தப்பி ஓடிவிட்டனர்.

வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள சர்வீஸ் சாலை வழியாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். பள்ளிக்கு வழக்கம் போல சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அந்த கார் சாலை தடுப்புகளை உடைத்தபடி சர்வீஸ் சாலையில் பாய்ந்தது.

அப்போது வளையாம்பட்டியில் இருந்து அரசு மேல்நிலை பள்ளிக்கு சர்விஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது அந்த கார் அதிவேகமாக மோதியது. அந்த கார் மோதிய விபத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேரை பொதுமக்கள் பிடித்து தாக்க முயற்சித்துள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு அலறி அடித்தபடி ஓடி வந்தனர். அவர்கள் தனது பிள்ளைகள் இறந்து கிடந்ததை கண்டு அழுது துடித்தனர். எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிரிசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது பற்றி தகவலறிந்த வாணியம்பாடி தாசில்தார் சம்பத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும். அந்த பகுதியில் சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

போலீசார் விபத்தில் பலியான மாணவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com