நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது

நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது

செவிலியர்களை ஒரு சிலர் தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்ஆர்பி செவிலியர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது எனவும், தற்பொழுது அவர்களுக்கு துறை ரீதியான மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா கால செவிலியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்.ஆர்.பி. செவிலியர்கள் அனைவருக்கும் பணிபாதுகாப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக 3949 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக இன்று மாலை அரசாணை வெளியிட இருப்பதாக அமைச்சர் கூறினார். 3949 செவிலியர்களும் பணியாற்றுவதற்கு தமிழகத்தில் உள்ள 38 ஆட்சித் தலைவர்கள் தலைமையில் மாவட்ட சுகாதார சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, நாளையிலிருந்து செவிலியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது.

அதில் 3949 இடங்களில், எம்.ஆர்.பி. செவிலியர்கள் 1800 பேருக்கு அதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும், எம்ஆர்பி செவிலியர்களுக்கு 14000 லிருந்து 18000 ஆக சம்பளம் உயர்த்தி, அந்தந்த மாவட்டத்திலேயே பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com