பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம்; சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னை பெருநகர மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகரத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவிடங்களில் சிறுநீர் கழிப்பதை தண்டிக்கும் நடைமுறை நீண்டகாலமாகவே பரிசீலனையில் இருந்து வந்தது. சிறுநீர் கழிப்பவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கமிஷன் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சென்னை மாநகராட்சியில் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டத்தில் இடமுண்டு என்கிறார்கள். சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1919 அதற்கு வழி வகை செய்கிறது. பொதுஇடங்களில் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுமளவுக்கு நடந்து கொள்ளும் தனிநபர்களை தண்டிக்க இச்சட்டத்தில் வழியுண்டு என்கிறார்கள்.
மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படும். பொதுமக்கள் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பொது கழிப்பறையை ஒட்டி சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
விதியை மீறிபவர்களுக்கு அபராதத் தொகை கட்டுமாறு நோட்டீஸ் தரப்படும். சென்னை மாநகரம் முழுவதும் பணியில் இருக்கும் சுகாதார மேற்பார்வையாளர்கள் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து, அபராத தொகையையும் வசூல் செய்வார்கள் என்கிறது சென்னை மாநகராட்சி.
50 ரூபாய் அபராதம் என்பது சின்ன தொகைதான். பொதுவிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றி சென்னைவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும் என்பதும் உண்மைதான். அபராதம் விதிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
சென்னை வாசிகளுக்கு சுத்தமான பொதுக்கழிப்பறைகள் தேவைப்படுகின்றன. பல வார்டுகளில் இது இன்னும் சாத்தியப்படவில்லை. முதலில் சென்னை முழுவதும் போதுமான அளவு கழிப்பறைகள் கட்டப்படவேண்டும். கட்டணக் கழிப்பறைகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், தூய்மையான முறையில் பராமரிக்கப்படுவது முக்கியம் என்கிறார்கள்