மாட்டு வண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் முடி சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு!

மாட்டு வண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் முடி சிக்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது மாட்டு வண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியதில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பலியானவர் விச்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த எஸ் லாவண்யா என்பதும், அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதும் தெரியவந்தது.

லாவண்யா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்துவிட்டதாகவும், அவரது தந்தை சரவணன் சென்னையில் வசிப்பதாகவும், அங்கு அவர் வேலை பார்த்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். லாவண்யா மற்றும் அவரது தம்பி புவனேஷ் (9) ஆகியோர் தாத்தா பாட்டி காண்டீபன் மற்றும் லதாவுடன் வசித்து வந்தனர். காண்டீபன் அந்தக் கிராமத்தின் மரியாதைக்குரிய மூத்த தலைமுறையினருள் ஒருவர் என்று கிராம வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் திருவிழா நடைபெற்றது. “தெய்வத்தை மக்கள் தேரில் இழுத்துக்கொண்டிருந்தபோது, டீசல் ஜெனரேட்டருடன் கூடிய ஒரு மாட்டு வண்டி தேரின் பின்புறத்தில் வைக்கப்பட்டது. குழந்தைகள் ஜெனரேட்டரைச் சுற்றி திரண்டனர், ”என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

இரவு 10 மணியளவில் ஜெனரேட்டர் அருகே அமர்ந்திருந்த லாவண்யாவின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது. “ திருவிழா காரணமாக அலறிய லவுட் ஸ்பீக்கர்களால் லாவண்யா உதவி கோரி எழுப்பிய கூக்குரல் கூட்டத்திற்கு கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து வண்டியில் இருந்த மின்விளக்குகளை அணைத்து, ஜெனரேட்டர் ஓய்ந்த பின்னரே... அலறல் சத்தம் வெளியில் கேட்கத் தொடங்கியது. அதன் பிறகு தான் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உதவி செய்தனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜெனரேட்டரில் இருந்து மீட்கப்பட்ட லாவண்யாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர், பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது லாவண்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். திங்கள்கிழமை, லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெனரேட்டர் ஆபரேட்டர் முனுசாமியை போலீசார் கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர். செவ்வாய்கிழமை லாவண்யாவின் இறுதிச் சடங்கில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோவில் திருவிழாவின் போது துரதிருஷ்டவசமாக அகால மரணம் அடைந்த லாவண்யா படிப்பில் சிறந்து விளங்கியதாகவும், போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com