மாணவியை ஓடும் ரயில் முன்  தள்ளி கொன்ற கொடூர இளைஞன் : மாணவியின் தந்தையும் தற்கொலை!

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி கொன்ற கொடூர இளைஞன் : மாணவியின் தந்தையும் தற்கொலை!

சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் தி.நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி-காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த மாணவியை அதே ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சதீஷின் டார்ச்சர் காரணமாக அந்த மாணவி மனவேதனையடைந்துள்ளார். இது குறித்து குடும்பத்தினரிடமும் கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சதீஷை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.. அதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சில தினங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் கல்லூரிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தகவலையும் மாணவி மறுபடியும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் குடும்பத்தினர் இனிமேல் பிரச்னை செய்தால் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

நேற்று வழக்கம் போல மாணவி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த சதீஷ், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. அப்போது இருவருக்கும் இடையே தகராறு நடந்த சமயத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மாணவியை பிடித்து ரயிலின் முன் தள்ளியதாக சொல்லப்படுகிறது. இதனை பயணிகள் பலர் நேரில் பார்த்து அலறியுள்ளனர்.

பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவி நொடி நேரத்தில் தண்டவாளத்தில் தலை துண்டாகி உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்து பயணிகள் பலர் அலறியுள்ளனர். இதையடுத்து தி.நகர் ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரின் சடலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து சதீஷை தேடிவந்தார்கள் .ரயில்வே போலீஸாரும் பரங்கிமலை போலீஸாரும் இணைந்து இந்த வழக்கில் சதீஷ் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை அமைத்தும் சதீஷை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தினை கேள்விப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியதில் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com