காதலர் தினத்துக்கு ஒரு நாள் முன்னால் தென்காசியில் ஒரு காதலனுக்கு நேர்ந்த சோகம்!
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் தன் காதலி கிருத்திகாவைத் தன்னிடம் இருந்து அவரது பெற்றோர் பிரித்துச் சென்று விட்டதாகவும். கிருத்திகாவுக்குத் தன்னுடன் வாழவே விருப்பம் என்றும் கூறி பெண்ணின் பெற்றோர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
கிருத்திகா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரைத் தன்னிடம் இருந்து பிரிப்பதற்காக கடத்திச் சென்று அவரது பெற்றோர் எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிருத்திகாவைத் தேடி தன்னிடம் ஒப்படைக்க ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருக்கிறார் திலீப்.
இந்நிலையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட கிருத்திகா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நேரில் வந்து தனக்கு தன்னுடைய பெற்றோருடன் செல்லவே விருப்பம் என்று தெரிவித்ததாகக் காவல்துறையினர் தரப்பில் செய்தி. இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பமே முக்கியம் எனக் கருதி நீதிமன்றத்தில் கிருத்திகாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதை ஏற்க விரும்பாத காதலன் திலீப் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் கிருத்திகாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக்கி விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தனர்.
கிருத்திகாவின் பெற்றோர் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவர்களிடம் நேரடியாக கிருத்திகாவை ஒப்படைக்க முடியாத நிலையில் அவரது உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கும் பணிகளைத் துரிதமாக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்காக கிருத்திகா ஒப்படைக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்யக் கோரி அவரது உறவினர் தரப்பில் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.
நாளை காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் திடீரெனக் காதலன் ஒருவர் தன்னை நாடி வந்த தனது காதலியைத் தன்னிடம் இருந்து அவரது பெற்றோர் பிரித்து விட்டார்கள் எனக்கூறி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வதும். பெற்றோரைப் பிரிந்து காதலன் தான் முக்கியம் என்று சென்ற காதலி மீண்டும் காதலனை விட்டு விட்டுத் தனது பெற்றோர் தான் முக்கியம் எனக்கருதி அவனது காதலை புறக்கணித்ததுமான இச்சம்பவம் அவர்களின் காதலைக் கேலிக்குரியதாக்கி இருக்கிறது. இது காதலா?