குடத்தில் மாட்டிக் கொண்ட நாயின் தலை! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

குடத்தில் மாட்டிக் கொண்ட நாயின் தலை! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தேனி மாவட்டம் பெரிய குளம் நகரின் வடகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர் தன் நாயை தனியே விட்டு விட்டு தன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். ஈஸ்வரி இல்லாமல் தனியே சுற்றித் திருந்த நாய் சம்பவ தினத்தன்று தாகத்தில் தெருவில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு வீட்டின் முன்புறமிருந்த பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் இருந்திருக்கிறது. அதைக் கண்ட நாய் நீரை அருந்த குடத்துக்குள் தலையை விட தலை உள்ளே சிக்கிக் கொண்டது.

குடத்தில் இருந்து தலையை மீட்க நாய் பலவாறாகப் போராடியும் அதனால் குடத்தின் நடுவில் சிக்கிக் கொண்ட தலையை மீட்க முடியவில்லை. குடத்தின் கழுத்துப் பகுதியில் தலை சிக்கிக் கொள்ள அப்படியே போராட்டத்துடன் நாய் தெருத் தெருவாக அலைந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு இரக்கப்பட்ட உள்ளூர் மக்கள் இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு புகார் அளித்தனர்.

கடைசியில் நாயின் தலையில் சிக்கிக் கொண்ட குடத்தை தீயணைப்புத் துறையினர் வந்து தான் மீட்க வேண்டியதாகி விட்டது. நாயிடம் இருந்து குடத்தைப் பிரிக்கவும், குடத்தின் கழுத்துப் பகுதியில் இருந்து நாயின் கழுத்தை மீட்கவும் மிகவும் சிரமப் பட்டுப் போயினர் தீயணைப்புப் படை வீரர்கள். பலத்த போராட்டத்தின் பின்பே குடத்தில் சிக்கிய நாயின் தலையானது மீட்கப்பட்டது. ஒரு வழியாக நாயின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்போர் இது போல வெளியூர் செல்லும் நிலை வந்தால் அந்தப் பிராணிகளின் உணவு மற்றும் பாதுகாப்புக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்த பின்னரே அவற்றைத் தனியே விட்டு விட்டு வெளியூர் செல்ல முடிவெடுக்க வேண்டும்.

சிலர் வளர்ப்புப் பிராணிகளை அப்படியே வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகின்றனர். சிலரோ தாங்கள் இல்லாத நேரங்களில் அவற்றுக்கு உணவு கொடுக்கவும், வெயில் காலங்களில் அவற்றின் தாகம் தீர்க்கக் கூட சரியான ஏற்பாடுகளைச் செய்யாமலும் கூட விட்டேற்றியாக இருந்து விடுகிறார்கள். அதனால் தான் வாயில்லா ஜீவன்கள் இத்தகைய அவஸ்தைக்கு உள்ளாக வேண்டியதாகி விடுகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com