பக்தி கோஷம் வானைப் பிளக்க தஞ்சையில் நடைபெற்ற பெரிய கோவில் தேரோட்டம்!

பக்தி கோஷம் வானைப் பிளக்க தஞ்சையில் நடைபெற்ற பெரிய கோவில் தேரோட்டம்!

லகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் சித்திரை திருவிழா வருடம்தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி, கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. அதையடுத்து, நாள்தோறும் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் ஆகியோருக்கு பால், தயிர், நெய், சந்தனம், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட பதினாறு வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்தத் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தேருக்கு முன்பு, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் தொடர்ந்து செல்ல, அருள்மிகு கமலாம்பாள் சமேத தியாகராஜர் எழுந்தருளிய திருத்தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடிச் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேருக்கு முன்பு சிவ வாத்தியங்கள் முழங்க, பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் சென்றனர். நான்கு  ராஜ வீதிகளின் வழியே சென்ற திருத்தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்தத் திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களின், ‘தியாகேசா… ஆரூரா…’ என்ற பக்தி முழக்கம் வானைப் பிளந்தது. தேரோட்டப் பாதையில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்தத் திருத்தேரோட்ட விழாவின் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com