காவல் உதவி ஆய்வாளரை உடைந்த பீர் பாட்டில் கொண்டு குத்திக் கொல்ல முயன்ற அரை நிர்வாண ரவுடி!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக வளாகத்தின் அருகில் இருக்கிறது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம். இங்கு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை அரை நிர்வாண மனிதர் ஒருவர் உடைந்த பீர் பாட்டில் கொண்டு குத்த முயன்ற சம்பவம் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டியில் திறந்தவெளி இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வருபவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த ராபின்சன். இவர் மீது வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ராபின்சன் இன்று காலையில் முகாமை ஒட்டி இருந்த மூடப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உள்ளே சென்று திருட்டில் ஈடுபட முயற்சித்துள்ளார். அப்போது அவரைத் தடுத்த பாதுகாவலரை ராபின்சன் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த தகவலறிந்து ராபின்சனை பிடிக்கச் சென்ற கும்மிடிப்பூண்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் என்பவரையும், தனிப்பிரிவு காவலர் ராமதாஸ் என்பவரையும் அந்த ரெளடி உடைந்த பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சித்திருக்கிறார்.
ராபின்சனின் முரட்டுத்தனமான கோபத்தையும், கொலை முயற்சியையும் கண்ட போலீஸார் அங்கிருந்த போலீஸ் ஜீப்பைச் சுற்றி சுற்றி வந்து உயிர் பயத்தில் தப்ப முயன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போலீஸாரை அச்சுறுத்தி தப்பி ஓடிய ராபின்சனைப் பிடிக்க கும்மிடிப் பூண்டி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருவதாகத் தகவல்.