ஊட்டியில் உருதுபள்ளியில் போட்டிப் போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி!

ஊட்டியில் உருதுபள்ளியில் போட்டிப் போட்டுக் கொண்டு  சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி!
Published on

ஊட்டி உருது நடுநிலைப்பள்ளியில் போட்டிப் போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ம் தேதி போட்டி போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்டதாக நான்கு மாணவிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் ஊட்டியில் தனியார் காட்டேஜில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்த சலீம் என்பவரின் மகள் ஜெய்பா ஃபாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஜெய்பா ஃபாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஊட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரசுப் பள்ளியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒருமுறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சம்பவம் நடந்த கடந்த 6-ந்தேதி கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றும், பள்ளிக்கூட பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com