சென்னையில் ஒரு பனிக்காலம் - அணி வகுக்கும் கொண்டாட்டங்கள்!

சென்னையில் ஒரு பனிக்காலம் - அணி வகுக்கும் கொண்டாட்டங்கள்!
Published on

ஜனவரி வந்தாலே சென்னை உற்சாகமாகிவிடுகிறது. அடுத்தடுத்து ஏராளமான கொண்டாட்ட நிகழ்வுகள் அணிவகுத்து நிற்கின்றன. வாரிசு vs துணிவு பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு நடுவேயும் அறிவுசார் சமூகம் உயிர்ப்போடு இருப்பதற்கு இத்தகைய நிகழ்வுகள் காரணமாக அமைந்து வருகின்றன.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 6ஆம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்கியது. பொங்கல் விடுமுறையையும் தாண்டி வரும் 22ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. தமிழின் முன்னணி பதிப்பகங்களும், படைப்பாளிகளும் பங்கேற்கிறார்கள். பல்வேறு புதிய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் நூல் வெளியீட்டுக் கூட்டங்களும் அறிமுக விழாக்களும் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 6,7,8 தேதிகளில் நடைபெற்ற விழாவில் ஏராளமான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் பங்கேற்கும் அமர்வுகள் நடந்தன. விழாவில் மாணவர்களுக்கான பயிலும் அரங்கம், சிறுவர்களுக்கு இலக்கிய அரங்கம், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம் என 4 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தமிழில் பிழையின்றி எழுதுதல், சமகால சூழலில் படைப்பு உருவாக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ்ப் பயிற்சி பட்டறைகளும், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 100 புத்தகங்களும் வெளியிடப்பட்டன. இதுவே மூன்று நாள் நிகழ்வின் ஹைலைட்டாக இருந்தது.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை முன்னெடுக்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது. 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் நகரில் 16 இடங்களில், பிரம்மாண்ட கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கலைக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கியச் சங்கமம் நடக்கவிருக்கிறது. இதில் இலக்கிய கருத்தரங்கம், விவாதமேடை, கவியரங்கம், கதை சொல்லல் என நான்கு நாள் (ஜன. 14, 15, 16, 17) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இலக்கியச் சங்கமம் நிகழ்வு சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தின் முத்தமிழ்ப் பேரவையில் நடைபெறும்.

சென்னை முழுவதும் அடுத்து வரும் நான்கு நாட்கள் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. எதில் கலந்து கொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டியது சென்னைவாசிகள்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com