ஆருத்ரா நிதி மோசடி - வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு தள்ளுபடி; கைதாவாரா?

ஆருத்ரா நிதி மோசடி - வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு தள்ளுபடி; கைதாவாரா?

கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பல்வேறு பிரபலங்களும், கட்சி நிர்வாகிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இது தொடர்பாக நடந்த கைதுகளும் அது தொடர்பான விசாரணைகளும் மாநில அளவில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

மோசடி தொடர்பாக திரைப்பட நடிகர் ஆர். கே. சுரேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியின. ஆர். கே. சுரேஷ் இந்தியாவில் இல்லையென்றும், குடும்பத்தினரோடு துபாய்க்கு சென்றுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. அவையெல்லாம் உண்மையென்று தற்போது உறுதியாகியிருக்கிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் உண்டு. சென்னை அமைந்தகரையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கை யாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏறக்குறைய ரூபாய் 2,438 கோடி பணத்தை நிறுவனம் வசூலித்ததாகவும், பேசியபடி நிறையபேருக்கு பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மோசடியில் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருந்தார்கள். விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி நடிகரும் பா.ஜ.க. கட்சி நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். படத் தயாரிப்பு சம்பந்தப்பட்ட பணிகள் தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகியதாகவும் அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் தன்னுடைய மனைவி, குழந்தைகளை கவனிப்பதற்காக தற்போது வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் ஆருத்ரா மோசடிக்கும் தனக்கு எந்த தொடர்பும்

இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களுடன் ஆஜராகும் படி அனுப்பப்பட்டுள்ள அந்த சம்மனில் எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரம் இல்லாததால் சம்மனை ரத்து செய்யப்போவதாகவும் வேண்டும் என்றால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும் படியும் காவல் துறையிடம் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த காவல்துறையினர் சம்மனை ரத்து செய்ய வேண்டாம் என்றும் சம்மன் குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், காவல்துறையை விளக்கமளிக்க அவகாசம் அளித்திருப்பதோடு ஆர்.கே.சுரேஷின் சம்மன் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது. இதையெடுத்து அவர் கைதாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. வெளிநாட்டில் உள்ள ஆர்.கே. சுரேஷ் கைதாவாரா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com