ஒரே நபர் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் -  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்பு!

ஒரே நபர் இரண்டு ரேஷன் கார்டு வைத்திருந்தால் நடவடிக்கை நிச்சயம் - உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்பு!

பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தமிழகம் முழுவதும உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. எந்த ஒரு குடும்ப அட்டைதாரரும் ஒரு கி.மீ எல்லைக்குள் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். அரசு விடுமுறை தினம், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நேரங்களில் கடைகள் திறந்திருக்கும்.

இந்நிலையில் நியாய விலை கடைகளை இன்னும் பல இடங்களில் விஸ்தரிக்கவும், அதன் வேலை நேரத்தை கூட்டவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து பணியாற்றி வருகிறது. காலையிலும் மாலையிலும் கூடுதல் நேரங்கள் கடைகள் திறந்து வைக்க ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பணி நிமித்தம் காரணமாக பலரால் நியாய விலைக்கடைகளுக்கு வரமுடியாத சூழல் இருப்பதால் காலை 9 மணிக்கே நியாய விலைக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடவே சில புதிய புதிய கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில புதிய நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

  • இந்தியக் குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக்கூடாது

  • ஒரே நபர் இரண்டு குடும்ப அட்டைகளை வைத்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

  • நியாய விலைக்கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்கக்கூடாது.

  • நியாய விலைக்கடைகளில் பிஓஎஸ் எந்திரம் மூலம் மட்டுமே இலவச வேஷ்டி, சேலை வழங்கவேண்டும்.

ஆதார் கட்டாயமாகிவிட்டதால், இந்தியக் குடிமகனாக இல்லாத ஒருவர் குடும்ப அட்டை பெறுவது இனி இயலாத காரியம். ஆனால், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கும், இலங்கை அகதிகளுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தருவதில் சிக்கல் இருக்கிறது. கூடவே, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய அறிவிப்புகள் எதுவுமில்லை.

ரேஷன் கார்டில் பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் முடியும். இதையெல்லாம் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தது. ஆனால், நடைமுறையில் செய்ய முடியவில்லை. பல ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் பெயர்க் குழப்பமும், குடும்பத் தலைவர் யாரென்பதை உறுதி செய்வதிலும் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

நியாய விலைக்கடைகளில் தரப்படும் சேவைகளை அதிகமாக்கும் அதே நேரத்தில் ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை நீக்குவது, போலி ஸ்மார்ட் கார்டுகளை கண்டறிவது போன்றவற்றிலும் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவேண்டும் என்று பயனாளிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com