வறண்டது அடவி நயினார் அணை!

வறண்டது அடவி நயினார் அணை!

தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் கோவில் அணை வறண்டது. இந்த அணை 132.22 அடி கொள்ளவு கொண்டது. நன்றாக மழைப்பொழிவு இருந்து அணை நிரம்பும் காலகட்டங்களில் இந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட இந்த அணை வறண்ட செய்தி இப்பகுதி விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அணை வறண்டதின் காரணமாக சுமார் 1000 ஏக்கர் அளவில் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.

செங்கோட்டை தாலுகா, மேக்கரைக்கு அருகில் வடகரை பேரூராட்சியில் அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அருமையான இடத்தில் அமைந்துள்ளது.

1992 ஆம் ஆண்டு வாக்கில் செங்கோட்டை, மேக்கரையில் ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக ஏராளமான சேதங்கள், நிலச்சரிவு, எண்ணற்ற உயிர்பலிகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழக அரசு 132 அடி உயரத்தில் இந்த அணையை நிறுவும் பணிக்கு அடிக்கல் நாட்டியது.

பண்பொழி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், இடைகால், ஆயக்குடி, சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையிலும் மேலும் சில ஊர்கள் இந்த அணையால் மறைமுகப் பயன் பெறும் வகையிலும் சுமார் 15000 ஏக்கர் விவசாய நிலங்கள் ஒட்டுமொத்தமாக இந்த அணையால் பயன்பெறும் விதத்தில் அடவி நயினார் கோவில் அணைக்கான திட்டப்பணியைத் தமிழக அரசு 1994 ஆம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து 8 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.

அணையின் மொத்தக் கொள்ளவு 175 மில்லியன் கன அடி.

2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் மூலம் சுமார் 7643.15 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த அணை வறண்டு காணப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com