ரூ.2000 நோட்டை வாங்க மறுத்த AGS திரையரங்கம்!

ரூ.2000 நோட்டை வாங்க மறுத்த AGS திரையரங்கம்!

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது பழைய செய்தி. அதையொட்டி நாட்டில் நடக்கும் களேபரங்கள் தான் இப்போது தினம் தினம் புதிய செய்திகளாகிக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் கிளீன் நோட் பாலிஸியின் படி ரூ.2000 நோட்டுக்களுக்கான தேவைகள் இல்லாது போனதாலும், முன்பு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் பயன்பாடு இன்றி கிடப்பில் மிஞ்சியதாலும் கடந்த இரு ஆண்டுகளாக அந்த நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்திருந்தது.

அதன் காரணமாகவே தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நோட்டுக்களை திரும்பிப் பெறுவது என இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. ஆனால், இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனக்கருதி இப்போது கையிருப்பில் இருக்கும் ரூ.2000 நோட்டுக்களை பொதுமக்கள் வங்கிகளில் செப்டம்பர் 30 தேதி வரையிலும் டெபாஸிட் செய்து வேறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது.

அதையொட்டி, சில வியாபார கேந்திரங்களில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைக் காரணம் காட்டி 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பது தான் இப்போதைய குழப்பத்திற்கு காரணம்.

சென்னை, மதுரவாயல் AGS திரையரங்கில் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பே வெளியிட்டிருக்கிறார்கள். இங்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஒட்டி ரூ.2000 நோட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என.

தியேட்டருக்குச் சென்றவர்கள், தியேட்டர் ஊழியர்களிடம் அது குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காணொளியில் ரூ.2000 நோட்டை வாங்க மறுக்கும் தியேட்டர் ஊழியரிடம், படம் பார்க்கச் சென்ற நபர், “இதென்ன கள்ள நோட்டா? கவர்ன்மெண்ட் நோட்டு இது?!” என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார். அருகிலிருக்கும் மற்றொருவர் இது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் படி அவருக்கு அறிவுறுத்திக் கொண்டிருப்பதையும் காண முடிந்தது.

இந்தக் குழப்பத்திற்கு காரணம், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அரைகுறையாகப் புரிந்து கொண்டு செயலில் இறங்குவதால் தான்.

பொதுமக்கள், தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். அல்லது வேறு எந்த வங்கிக் கிளைகளிலும் கூட அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது என்பது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.

செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

குழப்பத்தைத் தவிர்க்க பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளை முழுமையாகப் பரிசீலித்து விட்டு பிறகு நோட்டுக்களை மாற்ற முயற்சிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com