ஆவடி விமானப் படை வீரர் தற்கொலை!
ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் பணியிலிருந்த விமானப் படை வீரர் 22 வயதான நீரோவ் சௌஹான் நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:
ஆவடி விமானப் படை பயிற்சி மையத்தில் குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான நீரோவ் சௌஹான் என்ற வீரர் கடந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்.
இவர் நேற்று மாலை (செப்டம்பர் 14) ஏ.கே 47 ரக துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தானே தன் கழுத்தில் சுட்டு கொண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து விமான படை அதிகாரிகள் முத்தாபுதுப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்த சம்பவத்திலும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.