ராமநாதபுரத்துக்கு விரைவில் விமான நிலையம் - அமைச்சர் உறுதி

ராமநாதபுரத்துக்கு விரைவில் விமான நிலையம் - அமைச்சர் உறுதி

பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வந்து செல்லும் இடமான இராமநாதபுரத்திற்கு விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான நிலையம் உதான் திட்டத்தின் கீழ் பயணிகள் விமானங்களும் இயக்க தகுதி வாய்ந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தினமும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கோர் வந்து செல்கின்றனர்.

மீன்பிடி தொழில், முத்து, சங்கு மற்றும் பனைத்தொழில் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவாணியை இழுக்கும் முக்கிய மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் இம்மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தொழில் நிமித்தமாக மலேசியா, சிங்கப்பூர், மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக வந்து தரை வழியாக ராமநாதபுரத்தை அடைகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி, மக்களவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விமானநிலையம் அமைக்க முடிவு செய்து, அதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.

ராமநாதபுரத்திற்கு விமான நிலையம் எப்போது அமைக்கப்படும்? பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகம் வந்து செல்லும் இடமான இராமநாதபுரத்திற்கு விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு விரைந்து முன் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அமைச்சர் டாக்டர் வி கே சிங் பதில்,

நவாஸ் கனி எம்பி அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் டாக்டர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த இருந்தார். அதில்

ராமநாதபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான நிலையம் உதான் திட்டத்தின் கீழ் பயணிகள் விமானங்களும் இயக்க தகுதி வாய்ந்ததாக வல்லுனர்கள் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது.

மாநில அரசிடமிருந்து இலவசமாக நிலம் மற்றும் இதர தேவைகளை பெற்று ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல் கட்டமாக ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்திருந்தார்.

மகிழ்ச்சி

இதுகுறித்து நவாஸ் கனி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என நான் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

தொடர்ந்து பலமுறை நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசிடம் விடுத்திருக்கிறேன். விமான போக்குவரத்து துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறேன்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வந்து செல்லும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கின்றது, எனவே இங்கு விமான நிலையம் அவசியம் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்த நிலையில், இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்படும் என விமான போக்குவரத்து துறை பதில் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து ஒன்றிய அரசையும் மாநில அரசையும் அணுகி விமான நிலையம் அமைக்கப்பட்டு விமான சேவை தொடர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவருமான கே நவாஸ்கனி எம்பி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com