கர்நாடகா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூன்று வேட்பு மனுக்களும் நிராகரிப்பு!

கர்நாடகா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூன்று வேட்பு மனுக்களும் நிராகரிப்பு!

ர்நாடகா மாநில சட்டசபைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 3 மணியுடன் கால அவகாசம் முடிந்தது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 224 தொகுதிகளுக்கு மொத்தம் 3632 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்களுள் 3327 பேர் ஆண்கள், 304 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3632 பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த மூன்று வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூவரும் புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தவறாக நிரப்பி உள்ளதாகக் கூறி, தேர்தல் அதிகாரிகள் அவர்களின் வேட்பு மனுக்களை நிராகரித்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், புலிகேசி நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்தான் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதைப்போல் இரட்டை இலை சின்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய அன்பரசனை எதிர்த்து நெடுஞ்செழியன் என்பவரை ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கோலார் தங்க வயல் தொகுதிக்கு அனந்தராஜையும், காந்தி நகர் தொகுதிக்கு குமாரையும் வேட்பாளர்களாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூவரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com