14 ஆயிரம் புத்தகங்களுடன் அசத்தும் இடைப்பாடி அரசுப் பள்ளி நூலகம்.

14 ஆயிரம் புத்தகங்களுடன் அசத்தும் இடைப்பாடி அரசுப் பள்ளி நூலகம்.

லைபேசியே உலகம் என இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ளும் வகையில் மாறிவரும் சமூக சூழலில் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம் பள்ளிப்பாடங்களைத் தவிர மற்றப் புத்தகங்களை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கம்  குறைந்து வருகிறது இதனை மீட்டெடுக்கும் வகையில்  புத்தக வாசிப்பை இயக்கமாக செயல்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

          அந்த வகையில் பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த சேலம் அருகே பிரம்மாண்ட நூலகத்துடன் அசத்தி வருகிறது. அரசு பள்ளி சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட இடைப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வரும் முனைவர் பிரபு. பள்ளி மாணவர்களின் கல்வியை விட அவர்களின் ஒழுக்கமே வளமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்ல உதவும் என்பதில் உறுதியாக உள்ளவர். எனவே மாணவர்கள் படிக்கும்போதே நல்ல பல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என பள்ளியின் நூலகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் காரணமாக வேறு எந்த பள்ளியிலும் இல்லாத அளவில் இடைப்பாடி ஆண்கள் பள்ளி நூலகத்தில் 14,000 புத்தகங்கள் வைக்கப்பட்டு மாணவர்கள் வாசிக்கப்  பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபு கூறியதாவது: “இடைப்பாடியில் கடத்த 1927 ஆம் ஆண்டு ஜில்லா போர்டு ஸ்கூலாக இருந்த இப்பள்ளி 1933 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாகவும், 1977 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும், மாறியது தற்போது 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். 1927 ஆம் ஆண்டிலேயே பள்ளி நூலக இருப்பு பதிவேடு இருந்துள்ளது. அத்துடன் 1940 முதல் 1945 வரையில் டெல்லியில் இருந்து வெளியிடப்பட்ட இந்தியன் இன்பர்மேஷன் என்ற இதழ்கள் உள்ளன.

     இத்தகைய சிறப்புமிக்க பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கிடைத்து அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேலும் தூண்ட நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. . அதன்படி தற்போது அரசு பள்ளி அளவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 14 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 13,449 புத்தகங்கள் எமிசில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பழங்காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களின் பங்களிப்பு தொடர்பான படத்தொகுப்புகள் உள்ளன. இதில் ஒவ்வொரு படத்திற்கும் தமிழ் உட்பட ஏழு மொழிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அகராதிகள், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தன்னம்பிக்கை கதைகள், வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் ,மருத்துவம், வேளாண்மை, அறிவியல் சார்ந்த நூல்கள் என பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நூல்கள் அலமாரிகளில் அடுக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள்  மற்றும் போட்டித் தேர்வுக்கான பொது அறிவு நூல்களும் உள்ளன. தனிப்பதிவேடு மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புத்தக விநியோகம் செய்து பராமரிக்கப்படுகிறது. மாணவர்களின் வாசிப்பிற்கென நூலகத்துடன் இணைந்த சகல வசதிகளுடன் கூடிய வாசிப்பு அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் ஆர்வத்துடன் நூலகத்திற்கு வரும் மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படித்துப்  பயன் பெற்று வருகின்றனர். வகுப்புகள் இல்லாத மாணவர்களும் நூலகத்திற்கு வந்து அந்த  நேரத்தை  பயனுள்ளதாக மாற்றிக் கொள்கின்றனர். பள்ளியின் தமிழ் முதுகலை ஆசிரியர் அறிவழகன் தன்னார்வலராக முன் வந்து  நூலகத்தை பொறுப்புடன் நடத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறார்.

        இந்தப் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற பள்ளிகளும் தங்கள்  மாணவர்களுக்கு நூலக வசதியைத் தந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com