அங்கன்வாடி ஊழியர் போராட்டம் வாபஸ் : கோரிக்கைகள் நிறைவேறியதா?
தமிழகம் முழுவதுமுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கும் கோடைக்கால விடுமுறை, மகப்பேறு விடுப்பு உள்ளிட்டவற்றை அளிக்குமாறு கோரிக்கை விடுத்து மூன்று கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அங்கன்வாடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு அங்கன்வாடியை மாற்றியமைத்து வருவதாகவும் அதில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டமிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
குழந்தைகளின் வருகையை பொறுத்து, அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் வருகையை கணக்கில் கொண்டு பிரதான மையங்களை மினி மையமாக மாற்றுவதை கைவிட வேண்டும், ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன
அடுத்த கட்டமாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர்களுக்கு முழுமையாக கோடை விடுமுறை அளிப்பதை திரும்பப் பெறுவது குறித்த விவாதங்கள் கடந்த் காலங்களில் நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மூன்றாவது கட்டமாக போராட்டத்தில் இறங்கியிருக்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
கடந்த ஒரு வாரமாக மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படும் போராட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவதை போல் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்தாலும், அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கும் பிற பிரச்னைகளுக்குமான தீர்வுகளையும் முன்வைத்து போராடினார்கள்.
குறிப்பாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கான தொகை பில்லில் உள்ளதுபோல் முழுமையாக வழங்கப்பட வேண்டும். 1993-ல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்படுகின்றன. முன்னர் சத்துணவு ஊழியர்களை இதே கோரிக்கைகளை முன்வைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே வழியில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவேண்டும் என்கிறார்கள். கோரிக்கைகளை அரசு ஏற்குமா?