அண்ணாமலையார் மகா தீபம்! லட்சக்கணக்கான மக்கள் பெரும் திரள்!

Thiruvannamalai
Thiruvannamalai

இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் , கோயில் மலை உச்சியில், மாலை மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதற்கு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டிருந்தன. தமிழகமெங்கும் இருந்து அண்ணாமலையாரையும் மகா தீபத்தினையும் காண பெரும் திரளாக கூடியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் விழா பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

Deepam
Deepam

இன்று மகாதீபத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் தமிழகமெங்கும் இருந்து 30 முதல் 40 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்ள உள்ளனர். கோயிலில் மகா தீபத்தையொட்டி கரும்பு மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று மதியம் 12 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே புருஷா மிருக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கைலாச வாகனம், காமதேனு வாகனங்களில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவிழாவின் சிகரமாக மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையரையும் , மகா தீபத்தையும் காண லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com