சென்னை ஐ.ஐ.டியில் இன்னொரு தற்கொலை - நள்ளிரவில் தெருவில் இறங்கி போராடிய மாணவர்கள்!

சென்னை ஐ.ஐ.டியில் இன்னொரு தற்கொலை - நள்ளிரவில் தெருவில் இறங்கி போராடிய மாணவர்கள்!

சமீபத்தில்தான் மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் தர்ஷன் சோலங்கி என்னும் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு சாதி ரீதியிலான துன்புறுத்தல்கள் என்று மும்பை காவல்துறை கண்டறிந்தது. இந்நிலையில் இன்னொரு ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஐ.டி வளாகங்களில் ஜாதியப் பாகுபாடு, மொழி பாகுபாடு நிறைந்திருப்பதாக பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. புதிய இடம், மன அழுத்தம் ஆகியவையெல்லாம் தற்கொலை முடிவில் மாணவர்களை தள்ளிவிடுகின்றன. குறிப்பாக ஐ.ஐ.டி வளாகத்தில் காலடி எடுத்து வைக்கும் முதலாண்டு மாணவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஐ.ஐ.டி மட்டுமள்ள இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019ல் உயர்கல்வித்துறை வெளியிட்ட குறிப்புகளின் படி கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உள்ள 8 ஐ.ஐ.டி வளாகங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்தது. இதில் 14 சம்பவங்கள், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்திருக்கின்றன.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த மாணவர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சச்சின் குமார், வேளச்சேரியில் உள்ள வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சக மாணவர்களை பீதியடையச் செய்துள்ளது.

நேற்றிரவு சென்னை ஐஐடி வளாகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி, சச்சின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சச்சின் குமாரின் மரணத்திற்கு காரணமான அவரின் முனைவர் பட்ட வழிகாட்டி பேராசிரியர் அகிஷ்குமார் சென், அதை மறைக்க நினைக்கும் மாணவர்களின் டீன் நிலேஷ் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து நேற்று நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஐ.ஐ.டியில் தொடரும் தற்கொலைகளை தடுக்கவும், முழுமையாக விசாரணை செய்யவும் நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. சென்னையிலும், மும்பையிலும் ஐ.ஐ.டி வளாகங்களில் தொடரும் தற்கொலைகளை விசாரிக்க ஏற்கனவே பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. மன நல ஆலோசனை தருவதற்காக ஒவ்வொரு ஐ.ஐ.டி வளாகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதலாண்டு மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியை ஐ.ஐ.டி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

நடப்பு கல்வியாண்டில் மட்டும் 8 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் மேலும் 2 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளதாக மாணவர்கள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. தொடரும் விபரீதங்களை தடுக்க மும்பையை போல்,

சென்னையிலும் சிறப்பு குழு அமைத்து காவல்துறை விசாரணை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com