ஆளுநரை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் - கொதித்தெழுந்த தி.மு.க; நழுவிய அ.தி.முக!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரை தி.மு.க கூட்டணிக்கட்சிகள் கண்டித்து வந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று கூடிய சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், அமைச்சர் துரைமுருகன் ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு ஆளுநருக்கு மத்திய அரசு உரிய அறிவுரை வழங்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தவேண்டும் என்றும் ஆளுநரில் பேச்சுகள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குவதாகவும் எழுந்த கோரிக்கைகளில் அடிப்படையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள் சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும், அவையெல்லாம் மாநில நிர்வாகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னர் அ.தி.மு.கவினர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரிய தீர்மானத்தை முதலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக்கொண்டார். அதை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மறுத்து, ஆளுநர் சம்பந்தப்பட்ட தனித்தீர்மானத்தை முதலில் கொண்டு வரவேண்டும் என்று பேசினார்கள்.
தனிதீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை தனித்தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகரும் அறிவித்ததால் அ.தி.மு.கவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகரின் அறிவிப்பை எதிர்த்து, அ.தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் எண்ணி கணிக்கும் முறையில் சிறப்புத் தீர்மானத்திற்கு அனுமதி தருவதாக சபாநாயகர் அறிவித்தார்.
சட்டமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு சிறப்புத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார்கள். ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையெடுத்து பேசிய
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்று ஆளுநர், ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றியிருக்கிறார் என்றார்.
எது எப்படியோ, ஆளுநர் மீதான சிறப்புத் தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் கடைசி நேரத்தில் அ.தி.மு.கவினர் நழுவிவிட்டதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.