தீக்குளிக்க முயற்சி - சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தீக்குளிக்க முயற்சி - சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

விருத்தாச்சலத்தில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசிக்கும் மல்லிகா மேரி என்பவர் தனது நகைகளை 6 லட்சம் ரூபாய்க்கு தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து, அந்த பணத்தை அகதிகள் முகாமில் வசிக்கும் குழு தலைவி சங்கீதாவிடம் கொடுத்ததாகவும், அதன்பிறகு வாங்கிய பணத்தை திருப்புத் தராமல் சங்கீதா தன்னை ஏமாற்றிவிட்டதால் விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த மேரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் இலங்கை தமிழர் அகதி முகாம் உள்ளது. அங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த முகாமில் மல்லிகா மேரி என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நகைகளை 6 லட்சம் ரூபாய்க்கு தனியார் வங்கியில் அடகு வைத்து அந்த பணத்தை அகதிகள் முகாமில் வசிக்கும் குழு தலைவி சங்கீதாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை குழுவில் உள்ள 13 நபர்கள் தலா ஐம்பதாயிரம் ரூபாயாக பிரித்துக் கொண்டதாகவும் அந்த ஆறு லட்ச ரூபாயை குழு தலைவி சங்கீதா தராமல் தன்னை நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மல்லிகா மேரி இந்த சம்பவம் தொடர்பாக விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மல்லிகா மேரி விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் அந்த அலுவலகம் முன்பு கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் செய்தியாளர்கள்   மல்லிகா மேரியை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்பு அங்கிருந்த மல்லிகா மேரியின் கணவர் விஜயகுமாரும் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரையும் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். பின்னர் அங்கு வந்த ஏ எஸ் பி ரஞ்சித் ஜெயின் தீக்குளிக்க முயன்ற மல்லிகா மேரியிடமும் அவரது கணவரிடமும் விவரத்தை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com