ஜெயலலிதாவின் புடவைகள் உட்பட 29 பொருட்கள் ஏலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதாவின் புடவைகள் உட்பட 29 பொருட்கள் ஏலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாகத் தெரிய வந்தது.

இதனையடுத்து சொத்துக்குவிப்பு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

2017-ம் ஆண்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் சிறை தண்டனை பெற்றனர்.  தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் வீட்டிலிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

அதில், ஜெயலலிதாவிடம் இருந்து 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதாகவும், லெதர் காலணியாக இருந்தாலும் அதன் தரம் குறையும் என்பதால் அதை விற்று பணத்தைக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று  வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  மேலும் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்.

வழக்கை விசாரித்த பெங்களூரு முதன்மை நகர சிவில் செசன்சு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார், “ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள் உள்பட 29 பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விட வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேலும் இதனை மிக விரைவாக செயல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com