மலைப்பாதைகளில் ட்ரெக்கிங் செல்ல தடை!

மலைப்பாதைகளில் ட்ரெக்கிங் செல்ல தடை!

யற்கையின் மாற்றத்தால்   கோடை வெயில் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. சாலைகள் தோறும் இளநீர் தர்பூசணி, கூழ், மோர்,  என கோடையின் சீற்றத்தைத் தணிக்கும் உணவுகள் விற்பனை களைகட்டி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கோடை விடுமுறையில் பிள்ளைகளும் வீட்டுக்குள் முடங்கி விடுவார்கள். கடும் வெயில் காரணமாக இந்த நாட்களில் பொழுது போக்குகளுக்கும் தடை விதிக்கப்படும். சுற்றிலும் மலைகள் சூழ்ந்த சேலத்தின் மலையேற்றப் பிரியர்களின் பொழுதுபோக்கான ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்கும் தற்போது வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர், பச்சைமலை, தேனி, குரங்கணி, கல்வராயன் மலை உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில்  மலையேற்றப் பயிற்சிக்கான பாதைகள் உள்ளன. மலையேற்றம் உடலுக்கு வலுவைத் தருவதுடன் மலைகளில் உள்ள மூலிகைகளின் சுவாசத்தால் ஆரோக்கியத்துடன் புத்துணர்வும் தருவதால் சிறுவர் முதல் பெண்கள் வரை மலையேற்றத்தை விரும்பி வரவேற்கின்றனர். இதனால்  ஆங்காங்கே நகரில்  மலையேற்றப் பயிற்சி அளிக்கவும் பயிற்சி பெற்றவர்களை ஒருங்கிணைத்து மலையேற்றத்தில் ஈடுபடுத்தி மகிழவும்  என தனி குழுக்களும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

மலையேற்றத்திற்காக அந்தந்த பகுதியில் உள்ள மலைகளின் பொறுப்பாளர்களாக பணிபுரியும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுவது நடைமுறை. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது.  

எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த அதிர்ச்சியான  தீ விபத்து உயிரிழப்புகளால் இந்த வருடம் முன்னெச்சரிக்கை கருதி  கோடை காலத்தில் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரியும் நிலை உள்ளது. இதன் காரணமாக  மலைப்பாதைகளில் பயிற்சி மேற்கொள்ள தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர், பச்சை மலை, ஆத்தூர் கல்வராயன் மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப் பட்டு வந்தது. இந்த பகுதிகளில் இனி கோடைகால முடியும் வரை மலையேற்றத்திற்கு தடை விதிப்பதாக வன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “கோடைகால தீ விபத்து நேரங்களில் காட்டிற்குள் சென்று யாரும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விறகு எடுப்பதற்கும் ஆடு மாடு மேய்ச்சலுக்கும் கூட வனப்பகுதிக்குள் யாரும் வரக்கூடாது என்று மலை கிராம பகுதியில் உள்ள மக்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்” என்றனர் .

காட்டுத்தீ என்பது எப்படி எங்கு தோன்றும் என்பது தெரியாது என்பதாலும் அப்படி தோன்றும் தீயானது காய்ந்த இலை தழைக்களில் வெகு வேகமாக பரவி விடும் வாய்ப்புள்ளதால் அதிகாரிகளின் உத்திரவை மதித்து கோடைகாலத்தில்  காட்டுக்குள் செல்வதைத் தவிர்த்து  சரியான பாதுகாப்பு விதிகளைக் கடைபிடித்தால் உயிர் இழக்கும் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com