நாளை கோலகாலமாகத் தொடங்கவிருக்கும் புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர்!

நாளை கோலகாலமாகத் தொடங்கவிருக்கும் புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர்!

தென்னிந்திய கிரிக்கெட்டின் தந்தையான மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் 'மொதவரபு வெங்கட மகிபதி நாயுடு'வின் நினைவாக, புஜ்ஜி பாபு என அழைக்கப்படும் அகில இந்திய கிரிக்கெட் தொடர் நாளை முதல் செப்டம்பர் 11ம் தேதிவரை சேலம், கோவை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. 

அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஆண்டு புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது. 2016-17ல் நடக்க வேண்டிய புஜ்ஜி பாபு சீசன், ஐபிஎல் போட்டி காரணமாக நடக்கத் தவறியது. மேலும் மக்களிடம் 4 நாட்கள் வரை நடக்கும் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்ததால் 6 ஆண்டுகளாக இந்தத் தொடர் நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் இந்த போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. 

இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, A பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் 11, இந்தியன் ரயில்வே, திரிபுரா. B பிரிவில் மத்திய பிரதேசம், அரியானா, பரோடா. C பிரிவில் டெல்லி, ஜம்மு காஷ்மீர், மும்பை மற்றும் D பிரிவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 11, கேரளா, பெங்கால் அணிகள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு அணியுடனும் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் இந்த நான்கு பிரிவிலும் முதலிடத்தில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும். முதல் போட்டியாக நாளை அதாவது ஆகஸ்ட் 15 முதல் 18ஆம் தேதி வரை நடக்கும் ஆட்டத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் 11 அணியுடன் இந்தியன் ரயில்வே கோவையில் மோதுகிறது. மேலும் அரியானா - பரோடா நத்தத்திலும், டெல்லி - மும்பை சேலத்திலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் - கேரளா நெல்லையிலும் மோதுகின்றன. இந்த போட்டி தொடர்பான தன்னுடைய அனுபவத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவரும், கிரிக்கெட் வீரருமான க்ரிஷ் ஸ்ரீகாந்த் பகிர்ந்து கொண்டார். 

சுமார் 2 கோடி செலவில் நடக்கவிருக்கும் இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு 3 லட்சமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சமும், மேலும் ஆட்ட நாயகனுக்கு ரூ.10,000, தொடர் நாயகனுக்கு ரூ.25000 வழங்கப்பட உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com