ஹெல்மெட் அணியாததால் பிறந்த நாளில் உயிரைப் பறித்த பைக் டாக்ஸி பயணம்!

ஹெல்மெட் அணியாததால் பிறந்த நாளில் உயிரைப் பறித்த பைக் டாக்ஸி பயணம்!

34 வயது சேவிகா, தனியார் தொலைக்காட்சியின் செய்தி ஊடகம் ஒன்றில் மேக் அப் ஆர்டிஸ்ட்டாகப் பணி புரிந்து வந்திருக்கிறார் . நேற்றை தினம் ஞாயிற்றுக் கிழமை விதி பைக் டாக்ஸி ரூபத்தில் அவருக்கு எமனை அனுப்பி இருக்கிறது. தனது பிறந்தநாள் அன்று வியாசர்பாடியில் வசிக்கும் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் பைக் டாக்ஸி புக் செய்திருக்கிறார் சேவிகா. முதல்நாள் இரவு அடுத்த நாள் வரவிருக்கும் தனது பிறந்தநாளை தோழியுடன் கொண்டாடுவதற்காக தி.நகர் சென்றிருந்தார். அவர் அங்கிருந்து அவர் மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

சேவிகா பயணித்த பைக் டாக்ஸிக்குச் சொந்தக்காரர் எஸ்.ஆனந்தன் எனப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆனந்தன் சேவிகாவுக்கு முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் வழங்கி இருந்தால் இந்த விபத்தில் இருந்து அவர் தப்பியிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. சேவிகாவை ஏற்றிக் கொண்டு தி.நகரில் இருந்து வியாசர்பாடிக்குச் செல்லும் போது தேனாம்பேட்டை அருகே அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோதி பைக் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த ஆனந்தன் மற்றும் சேவிகா இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் ஹெல்மெட் அணிந்திருந்த காரணத்தால் ஆனந்தன் உயிர் சேதமின்றி தப்பி விட்டார். ஆனால், ஹெல்மெட் அணிந்திராத காரணத்தால் தரையில் மோதிய வேகத்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து போனார் சேவிகா. அவர்களை இடித்த லாரி விபத்துக்குப் பிறகும் கூட நிற்காமல் அதிவேகமாகக் கடந்து சென்று விட்டதாகத் தகவல். விபத்து நடந்தஇடத்தில் அந்த சமயத்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்ஸுக்கும் காவல்துறைக்கும் தகவல் தரவே, காவல்துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சேவிகா இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டார். ஆனந்தனுக்கு சிறிய காயங்கள் மட்டுமென்பதால் அவர் பிழைத்துக் கொண்டதோடு அங்கு தங்கி மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்.

விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் பைக் டாக்ஸியை இடித்து விட்டு நிற்காமல் சென்ற லாரி யாருக்குச் சொந்தமானது? லாரியை விபத்தின் போது இயக்கியவர்கள் யார்? என்பது குறித்த காவல்துறை விசாரணை நடந்து வருகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com