ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு- தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு- தமிழக வாழ்வுரிமைக் கட்சி

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்புவிடுத்திருந்தது.

இந்த அழைப்பை புறக்கணிப்பதாக விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 9ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் அநாகரீகத்தின் உச்சம் என்பது மட்டுமல்ல,அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அடியாளாக அவர் செயல்பட்டு வருகிறார்.

சனாதன சாக்கடையை சந்தனம் என்று வர்ணிப்பது, வள்ளுவத்தில் இருந்த ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் நீர்த்துப் போகச் செய்துவிட்டார் என்று கூறுவது,  தமிழ்நாடு என்ற பெயரையே ஏற்க மறுத்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

பொங்கல் நாளில் ஆளுநர் அனுப்பிய அழைப்பில் தமிழ்நாடு என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதோடு தமிழ்நாடு அரசின் இலச்சினையும் அகற்றப்பட்டு இருந்தது. அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் , தமிழ் உணர்வாளர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதுஎன 20க்கும் மேற்பட்ட சட்டமுன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழ்நாட்டின் அரசையும், மக்களையும் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்.

 ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பெயர்களை உச்சரிக்க மறுத்தும், மாநில சுயாட்சி, சமூக நீதி போன்ற வார்த்தைகளை தவிர்த்தும், மரபுக்கு எதிராக, பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் நோக்கத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

எனவே, குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com