காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்!  5 மண்டலங்களில் விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்! 5 மண்டலங்களில் விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை புதியதாக அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல் படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் படுகிறது.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னையில் மேலும் 5 மண்டலங்களில் விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நான்கு மண்டலங்களில் தொடங்கப்பட்டது. 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, 36 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது.

முதற்கட்டமாக வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,941 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சென்னை முழுவதும் உள்ள எஞ்சிய 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென் சென்னையில் உள்ள திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 மண்டலங்களில் செயல்படும் பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசிற்கு அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

5 பொது சமையல் கூடங்களை ஏற்படுத்தி, பள்ளிகளுக்கு காலை உணவை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப் பட உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com