அரசு மருத்துவமனைகளில் குறையும் சிசேரியன்!

அரசு மருத்துவமனைகளில் குறையும் சிசேரியன்!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிசேரியன் அறுவை சிகிச்சையால் குழந்தைப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் இளம் தாய்மார்கள் அச்சத்தில் இருந்து வரும் சூழல் நிலவுகிறது. சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு தாய்மார்களின் ஆரோக்யம் கேள்விக்குறியாவதுடன், பிறக்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்புடைய பல்வேறு பாதிப்புகள் வருங்காலத்தில் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.

இதைத் தவிர்க்கவே தற்போது நவீன யுகத்தில் சோதனைக் குழாய் முறையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இந்தியா முழுவதும் சகஜமானதொரு வாடிக்கையாகி வருகிறது. இது குறித்து எதிர்மறையாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதும் பணம் படைத்த பலரும் இதைச் செயல்படுத்திப் பார்க்கத் தவறவில்லை என்பதற்கு வாடகைத் தாய் மூலம் குழந்தைப்பேறு என்பதாக சமீபத்தில் ஊடகங்களில் வைரல் ஆன பிரபலங்களின் குழந்தைப்பேற்று கதையைக் கூறலாம்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க…

அரசு மருத்துவமனைகளில் குறையும் சிசேரியன் என்றொரு செய்தி இன்று இளம் தாய்மார்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் கணிசமானவை.. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் 60% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் 2021 ல் 43% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2022 ல் 40% ஆகக் குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை மட்டுமாக அரசு மருத்துவமனைகளில் நடந்த 4.24 லட்சம் பிரசவங்களில் 1,68,946 பேருக்கு மட்டுமே சிசேரியன் நடந்துள்ளது. மீதமுள்ள 2,55,125 பிரசவங்களும் சுக பிரசவங்களே!

இதன் மூலமாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் மூலமாக நடைபெறும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பது ஆதாரப்பூர்வமாகத் தெரிய வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மொத்த பிரசவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 27.46 லட்சம் பிரசவங்களில் அரசு மருத்துவமனையில் மட்டுமாக சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரசமாகியுள்ளது. மீதமுள்ள 11 லட்சம் பிரசவங்கள் தனியார் மருத்துவமனை வாயிலாக நடந்துள்ளன. இவற்றில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் தான் அதிகபட்சமான சுக பிரசவங்கள் நடந்துள்ளன என்கிறது அரசின் புள்ளி விவரக்கணக்கு.

குழந்தைப் பேற்றைப் பொருத்தவரை தனியார் மருத்துவமனைகளுக்குச் சற்றும் குறையாதவகையில் அரசு மருத்துவமனைகளும் மிகத்தரமான சிகிச்சை அளித்து வருவது உண்மை. ஆயினும் அவற்றின் சுகாதாரமின்மை, பாதுகாப்பின்மை காரணமாக பொதுமக்களில் பலர் அவற்றைப் பிரசவத்திற்காக அணுகப் பயந்தனர்.

ஆனால், ஏழை எளியவர்களுக்கு பிரசவமென்றால் அவர்களுக்கான சிறந்த புகலிடமாக விளங்கி வருவது இன்று வரையிலும் அரசு மருத்துவமனைகளே!

மேற்கண்ட ஆதாரப்பூர்வ தகவல்கள் வாயிலாக சுக பிரசவத்திற்காகவேனும் மக்கள் இனிஅரசு மகப்பேறு மருத்துவமனைகளை நாடுவார்கள் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com