கோவையில் கார் குண்டு வெடிப்பு! 'உபா' சட்டத்தில் கைது!

கார் குண்டு வெடிப்பு
கார் குண்டு வெடிப்பு

கோவையில், காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், ஐந்து பேர் சட்ட விரோதச் செயல் தடுப்புச் சட்டமான 'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியான சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த 23ம் தேதியன்று காலை, 4:00 மணிக்கு, 'மாருதி 800' காரில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதாக தகவல் வெளியானது.

போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்த உக்கடம் கோட்டை மேடை சேர்ந்த அப்துல் காதர் மகன், பி.இ., பட்டதாரி ஜமேஷா முபின் (29) சடலமாக கிடந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறையினர் சோதனையிட்ட போது, கோலி குண்டுகள் மற்றும் ஆணிகள் சிதறிக் கிடந்தன.

இதை வைத்து, சதி செயலில் ஈடுபட ஏற்கனவே திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆறு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின், வீட்டின் அருகே 'சிசிடிவி' கேமராக்களை பரிசோதித்தபோது, அவரது வீட்டில் இருந்து ஐந்து பேர் சேர்ந்து, ஒரு மூட்டையை காரில் ஏற்றி சென்றது உறுதியானது.

சம்பவம் தொடர்பாக, ஜமேஷா முபின் கூட்டாளிகளான உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கர், 25, முகமது அசாரூதீன், 23, உக்கடம், ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமதுரியாஸ், 27, பிரோஸ் இஸ்மாயில், 27, முகமது நவாஸ் இஸ்மாயில், 26, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தியதில், கோவையில் பல்வேறு இடங்களில் சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதையடுத்து அவர்கள் மீது, 'உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையான, என்.ஐ.ஏ., தானாக முன்வந்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு முன் வரும் பட்சத்தில், புதிதாக என்.ஐ.ஏ., சார்பில் வழக்குப் பதிவு செய்யப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com