இன்று முதல் சென்னை புத்தகக் கண்காட்சி!

இன்று முதல் சென்னை புத்தகக் கண்காட்சி!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 46வது புத்தகக் கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொள்கிறார். இந்தப் புத்தகக் கண்காட்சி, இம்மாதம் 22ம் தேதி வரை தொடர்ந்து 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

சென்ற ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆயிரம் அரங்குகளாக அது உயர்த்தப்பட்டுள்ளது. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்றும் பிரத்யேகமாக அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வழக்கம்போல், கண்காட்சி நாட்களின் மாலை வேளைகளில் எழுத்தார்கள் மற்றும் பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிகளும் உண்டு. இந்த ஆண்டு திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும், 'குயர் பப்ளிசிங் ஹவுஸ்' நிறுவனத்துக்கும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் விசேஷமாக 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதற்கென தனி அரங்கங்கள் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா, லண்டன், இத்தாலி, பிலிப்பைன்ஸ், டாண்சானியா, அர்ஜெண்டினா போன்ற இருபத்தைந்து நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டுப் படைப்புகளை இதில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இது குறித்துப் பேசிய பொதுநலத்துறை இயக்குநர் இளம்பகவத், ‘‘இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி தமிழின் சிறப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் தமிழ் நூல் படைப்பாளர்களுக்கும் வெளிநாட்டு நூல் படைப்பாளர்களுக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு ஏற்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல், இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com