அமைதி வழியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்... இனி ஒலிப்பெருக்கி அறிவிப்புகளுக்கு தடா!

அமைதி வழியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்... இனி ஒலிப்பெருக்கி அறிவிப்புகளுக்கு தடா!

தினமும் 5 லட்சம் பயணிகள் வந்து போகும் இடமான சென்னை சென்ட்ரல் இனி அமைதிப் பூங்காவாக மாறப்போகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒலிக்கும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் பயணிகளுக்கு உதவியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒலி மாசு ஏற்படுத்துவதாக சூழியல் வல்லுநர்கள் தொடர்ந்து குறை கூறி வந்தார்கள்.

புறப்படும் ரயில்களின் எண், சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்களும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், புறப்பட்ட ஊர், ரயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் இத்தகைய விபரங்கள் காண்பிக்கப்படும்.

இதன் மூலமாக சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், `அமைதியான ரெயில் நிலையம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை நியமிக்கப்படும். டிஜிட்டல் திரையில் பார்க்க முடியாதவர்கள், தகவல் மையங்களை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர ரயில் நிலையத்திற்கு வெளியேயும் புதிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளன. பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரெயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் புதிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் மூலமாக பயணிகள் படித்து அறிந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள் சைகை மொழி வீடியோ மூலம் அறிய கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்களை அணுக முடியும்.

ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு இல்லாததால், பதட்டத்தோடு தாமதாக வந்து சேரும் பயணிகளுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ஆகவே, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு எந்த பிளாட்பாரத்தில் ரயில் நிற்கிறது, எப்போது கிளம்பும் என்பதை எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்திகளாக தரலாம் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் இதை பரிசீலிப்பதுடன் இன்னும் பல ரயில் நிலையங்களை அமைதி ரயில் நிலையமாக மாற்றும் முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com