சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24: முழு விபரங்கள் இங்கே!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24: முழு விபரங்கள் இங்கே!

நெல்லை, கும்பகோணம் போன்ற மாநகராட்சிகளில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் நடுவே முட்டல், மோதல் என பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் சென்னை மாநகராட்சி மட்டும் நாளுக்கு நாள் ஸ்கோர் செய்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

7 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சென்ற ஆண்டு சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அதுவரை நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் சாலை மேம்பாடு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் மேயர் பிரியா தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டைப் போல் பல முக்கியமான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை கவச உடையும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியானது ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும். சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் மஞ்சப்பை வழங்கும் திட்டம் சுய உதவிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொதுமக்களின் வரவேற்பு மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மாநகர மக்களின் குறைகாண கண்டறிந்து அவற்றின் மீது தீர்வுகாண 'மக்களை தேடி மேயர்' என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1913 அமைப்பு மையம் மூலமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு கூட்டமைப்புகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'நம்ம சென்னை செயலி' மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தபால் மூலம் ஆணையர் அலுவலகம் வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர் திட்டம்' வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.

சென்னையின் பார்க்கிங் பிரச்னையின் இவ்வாண்டு கவனம் செலுத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க ஒரு பிரத்தியேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும்.

சென்னையில் காலிமனைகளில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதற்கு காலி மனை உரிமையாளர்களே பொறுப்பு. காலி மனைகளை ஆண்டுதோறும் சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணிக்காக திட்டம் தயாராகிறது. காலி மனையில் முதலீடு செய்துவிட்டு, அதை சரிவர பராமரிக்க தயங்கும் உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியை இனி நாட வேண்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com