‘பரியேறும் பெருமாள்’ படப் புகழ் தங்கராஜ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

‘பரியேறும் பெருமாள்’ படப் புகழ் தங்கராஜ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்துக் கலைஞரான இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த, ‘பரியேறும் பெருமாள்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவருக்குக் கடந்த புதன்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கிராமியக் கலைஞர் தங்கராஜ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், ‘கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ் அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதி கூட இல்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வந்த கிராமியக் கலைஞர் தங்கராஜுக்கு, பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இவருக்குப் பேச்சிக்கண்ணு எனும் மனைவியும், அரசியலகுமாரி எனும் மகளும் உண்டு. இறந்த தங்கராஜின் உடல் நாளை பிற்பகல் சிந்துப்பூந்துறையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com